Sunday, September 13, 2015

நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் மண்டை ஓட்டுடன் பூஜை பொருட்கள்!!

மதுரை: நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட மலம்பட்டி சுடுகாட்டில் மண்டை ஓட்டுடன்  பூஜை பொருட்கள் கிடைத்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் விசாரித்து வரும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.பி. நிறுவனம் மன நலம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை நரபலி கொடுத்து ஓலைப்பாயில் சுருட்டி புல்டோசரில் குழி தோண்டி சின்ன மலம்பட்டி சுடுகாட்டில் ஒரு பனை மரத்தின் கீழ் புதைத்ததை நேரில் பார்த்ததாக மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவை சேர்ந்த் சேவற்கொடியான் என்கிற பிரபு பகீர் புகாரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சகாயத்தை நேரில் சந்தித்து கொடுத்தார்.

முதலில் புகாரை வாங்கிய சகாயம், அந்த புகாரில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்று தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் நேற்று திடீரென தனது குழுவினருடன் சேவற்கொடியான் கூறிய இடத்திற்கு சென்று உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கிறதா என்று தோண்ட கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு அதிகாரிகள், காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு முழுவதும் அவர் மலம்பட்டி சுடுகாட்டிலேயே தங்கினார்.
 இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மலம்பட்டி சுடுகாட்டில் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்படி தோண்டும் போது சில தடையங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதால் மனிதர்களின் உதவியோடு அங்கு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

மலம்பட்டி சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது முதலில் 5 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அவற்றை மருத்துவ குழுவினர் சேகரித்தனர். அதை தொடர்ந்து தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 5 அடி தோண்டியபோது, அங்கிருந்து ஒரு மனித மண்டை ஓடு, 2 கால் எலும்புகள், 2 கை எலும்புகள், 2 முழங்கால்கள் மற்றும் 2 சிறிய எலும்புகள் என மொத்தம் 9 எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
 மேலும், அங்கு தோண்டப்பட்ட இடத்தில் மண்டை ஓட்டுடன் வெள்ளை நிற வேட்டியும், காவித் துண்டு ஒன்றும் எடுக்கப்பட்டு உள்ளது. எலும்புகளுடன் மந்திரித்த தேங்காய் ஒன்றும், பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது.
இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து புதைக்கப்பட்ட ஆண்டி என்பவருடையதாக இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஆண்டியின் மகள் சின்னகருப்பி என்பவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து இந்த இடத்தில் தான் உங்கள் தந்தையை புதைத்தீர்களா என்று விசாரணை நடத்தினர்.
ஆனால் சின்னக்கருப்பி, தனது தந்தையை இந்த இடத்தில் புதைக்கவில்லை என்றும் வேறு இடத்தில் புதைத்ததாக கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து, அந்த பகுதியில் தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment