நீங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் இடத்துக்கு வரவில்லை. என்று விஷாலுக்கு ராதிகா அறிவுறுத்தியிருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் அணியின் சார்பில் இன்று மாலை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ராதிகா, சிம்பு, பாக்யராஜ், ஊர்வசி, மோகன்ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ராதிகா பேசியதாவது:
"இப்போது இருக்கும் சூழ்நிலை எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. நான் ஒரு நடிகை என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது.
சி.சி.எல் என்று நடிகர்கள் எல்லாம் ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாடும் அமைப்பு ஒன்றை சரத்குமார் தொடங்கினார். அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. சரத்குமார் மீது அன்று முதல் காழ்ப்புணர்ச்சி ஆரம்பமானது.
துபாயில் சரத்குமாரிடம் தவறாக நடந்து கொண்டார் விஷால். அப்போது இது தவறு, இப்படி எல்லாம் பண்ணக் கூடாது என்றேன். அப்போது அதை கேட்டுகொள்ளும் நிலைமையில் விஷால் இல்லை. மறுநாள் சரத்குமாரிடம் இனிமேல் உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு வராதீர்கள் என்று கூறிவிட்டேன். அன்று முதல் இன்று வரை சரத்குமார் அதில் பங்கேற்பதில்லை.
திடீரென்று கையெழுத்து இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அப்போது கார்த்தி, நாசர், கமல் ஆகியோரிடம் பேசினேன். யாருமே சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால், கமல் அதில் முதலில் கையெழுத்திட்டார்.
இன்றைக்கு என் குடும்பத்தை தாக்குகிறார்கள். என் மகள், மகனை தவறாக பேசுகிறார்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் "உங்களுக்கு என்னப்பா வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது அவரால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. கட்டிடம் வேண்டுமா வாருங்கள். ஒற்றுமையாக இருக்கலாம். இந்த பிரிவினை வேண்டாம்.
லண்டன் சென்றிருந்த போது கமல் சாரிடம் பேசினேன். அப்போது, "இந்த அசிங்கத்துக்குள் வர விரும்பவில்லை". இது தான் அவர் சொன்ன வார்த்தை. இது அவருடைய விருப்பம். இந்த சண்டை வேண்டாம்.
நாளைக்கு நாசர், கார்த்தி, விஷாலை நான் பார்க்க மாட்டேனா? தவறாக பேசுகிறார்கள். இது என்ன அரசியல் மேடையா? 3000 ஓட்டுகள் அவ்வளவு தான் பிரச்சினை.
என்னுடைய கணவர் சரத்குமார் கமலைக் குற்றம் சாட்டினார். அவர் எல்லா விஷயத்துக்கும் போய் நிற்பார். சில விஷயங்கள் எனக்கு உடன்பாடு கிடையாது. 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்களின் பிரச்சினையின் போது சரத்குமார் போய் நின்றார். கமல் சாரிடம் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நீங்கள் ஒரு பெரிய நடிகர் என்று உங்களை கெளவரப்படுத்துகிறோம் இல்லையா. கமல் சார், ரஜினி சார் ஆகியோரிடம் ஒன்றை மட்டுமே கேட்கிறோம். இங்கே ஒரு சண்டை ஒன்று நடக்கிறது, ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள். அது தான் எனக்கும் சரத்குமாரும் வருத்தம்.
விஷால், கார்த்தி இருவரையும் பின்னாடி இருந்து யாரோ தூண்டி விடுகிறார்கள் என்பது தான் உண்மை. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முதலில் தெளிவாக சொல்லுங்கள்.
நடிகர் சங்கத்துக்கு வருமானம் வரும்படி செய்வோம் என்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது. விஷாலிடமே நேரடியாக கேட்டேன். 'தம்பி... நீங்க ரஜினி, கமல், அஜித், விஜய் இடத்துக்கு வரவில்லை. உங்களது முந்தைய படமே தமிழ்நாட்டில் 5 கோடி மட்டுமே வசூல் செய்தது. உங்கள் படத்துக்கு 30 கோடி வரும் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். எல்லாரும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்' என்றேன். அவரால் பதில் பேச முடியவில்லை.
அதேபோல், 'நீங்கள் இப்போதுதான் மார்க்கெட்டை சரி செய்துகொண்டு இருக்கிறீர்கள்' என்று கார்த்தியிடம் சொன்னேன். இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை என்று தெரியவில்லை.
ஒரே நல்ல விஷயம், இந்த பிரச்சினையை நிறுத்த வேண்டும் என்று திரைத்துறை கூட்டாக சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நண்பர்கள். நானும் ஒரு நாடக நடிகருக்குப் பிறந்தவர். நாடக நடிகர்களை வேறுபட்டு பார்க்கக் கூடாது. இன்று தமிழ் சினிமா குடும்பத்தில் நடக்கும் சண்டைக்கு நீங்கள்தான் (விஷால் அணி) காரணம். இதுதான் உங்களுடைய இலக்கா? தயவு செய்து சிந்தித்து, எங்களுடன் பேசுங்கள்'' என்று ராதிகா பேசினார்.
No comments:
Post a Comment