Thursday, October 1, 2015

முதல் பார்வை: புலி - 'அட்டாக்' பண்ணாத பாய்ச்சல்!






விஜய் நடிப்பில் 58-வது படம், விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் முதல் படம், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி என நல்ல ஸ்டார் காஸ்டிங் உள்ள படம், நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத் இசை, முத்துராஜின் கலை இயக்கம், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு என்ற சிறந்த டெக்னீஷியன்கள் பணியாற்றிய படம் என்ற இந்த காரணங்களே 'புலி' மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி. பகைக்கு முன்னாடி நான் புலி' என்று விஜய் பேசும் பன்ச் டயலாக் ட்ரெய்லரிலேயே ஹிட்டடித்தது. படம் ரசிகர்கள் மனதில் ஹிட்டடித்ததா?
'புலி' கதை: அடிமைகளில் ஒருவராக வளரும் விஜய் தன் காதல் மனைவியைக் காப்பாற்ற ஆளும் அரச வம்சத்தை எதிர்க்கிறார். இடையில் தன் வரலாறை அறிந்துகொள்கிறார். அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? காதல் மனைவியை மீட்டாரா? அவருக்கு யார் யார் உதவினார்கள்? எப்படி பகையை வெல்கிறார்? என்பது மீதிக் கதை.
மருதீரன் கதாபாத்திரத்துக்கு விஜய் நச்சென்று பொருந்துகிறார். முதல் பாடலிலேயே டான்ஸில் பின்னி எடுப்பது, பன்ச் பேசுவது, காதல் செய்வது, துரோகத்தைக் கண்டு பொருமுவது, பகையைக் கண்டு எகிறுவது, இழப்பில் வருந்துவது என எல்லா பக்கமும் ஸ்கோர் செய்கிறார். வழக்கமாக விஜய்க்கு என்று ஒரு நகைச்சுவைத் தன்மை இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை.
'இப்படிக் கூட காதலை சொல்வியா நீ?' என்று கேட்கும் ஸ்ருதி ஹாசன் படம் முழுக்க ஆடை குறைப்பில் தாராளம் காட்டியிருக்கிறார்.
ஹன்சிகா மோத்வானி அழகாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார். மற்ற படி படத்தில் வந்து போகிறார்.
சுதீப் என்ட்ரி ஆகும்போது காட்டும் கம்பீரம், படம் முழுக்க இல்லை. கொஞ்சம் கொஞ்சம் முறைப்பதும், துரோக முகம் காட்டுவதுமாக கடந்து செல்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஸ்ரீதேவி மறுவருகை புரிந்திருக்கிறார். வரவேற்க நாம் தயாராக இருந்தாலும், வருகையின் விதம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. கண்களை உருட்டும், உடல் மொழியால் மிரட்டும் ஸ்ரீதேவி கூடுதல் மேக்கப்பில் மட்டும் ஸ்ரீதேவி கொஞ்சம் பயமுறுத்துகிறார்.
தம்பி ராமையா, சத்யன் ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், காமெடி மிஸ்ஸிங்.
பிரபு, நரேன், நந்திதா, வித்யூ லேகா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, சங்கிலி முருகன், விஜயகுமார் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
முத்துராஜின் கலை இயக்கமும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலம். நட்டி நட்ராஜ் படத்துக்கான ஒட்டு மொத்த பிளஸ்ஸையும் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புலி புலி பாடலும், ஏன்டி ஏன்டி மெலடி பாடலும், ஜிங்கிலியா பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் எந்த குறையும் வைக்கவில்லை.
ஸ்ரீகர் பிரசாத் மன்னவனே பாடலை கத்தரி போட்டிருக்கலாம். ஹைப் இருக்க வேண்டிய இடத்தில் தடையாக இருக்கிறது. லீனியர் எடிட்டிங் தேமே என்று மெதுமெதுவாய் கடக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிவிட்டது.
ஒரு ஃபேன்டஸி அட்வென்ச்சர் திரைப்படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட், சின்னச் சின்ன டீட்டெய்லிங், குழந்தைகள் விரும்பும் சில விஷயங்கள் என எல்லாவற்றையும் பதிவு செய்ய இயக்குநர் சிம்புதேவன் முயற்சித்திருக்கிறார். ஆனால், அது வெறும் முயற்சியாக மட்டுமே போய்விட்டதால் பலன் கிட்டவில்லை.
வழக்கமான, பழக்கமான அடிப்படைக் கதையை வைத்துக்கொண்டு, திரைக்கதையில் எதுவும் செய்யாமல் டெக்னீஷியன்கள் உழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
எம்.ஜி.ஆர் படத்தின் சட்ட வட்ட செவ்வக கட்டமைப்புகளுக்கு உட்பட்ட கதைதான். அதில் எந்த த்ரில்லும், தில்லும் இல்லாமல் உருவாக்கப்பட்ட காமாசோமா என்று நகரும் திரைக்கதை எந்த உற்சாகத்தையும் கொடுக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக, ஃபேன்டஸி அன்வென்ச்சர் படம் என்று 'புலி'யைக் குறிப்பிடுவதற்கு தகுந்த எந்தப் பாய்ச்சலும் இல்லாதது எந்தத் தரப்பு ரசிகருக்கும் ஒவ்வாதது.
படம் பார்த்து முடிந்ததும், ஒரு ரசிகரிடம் பேசினேன். எப்படி இருக்கு என்றேன். அமைதியாய் சிரித்தார்.
பிடிச்சிருக்கா பாஸ்?
"விஜய் ரசிகன் நான். என்ன சொல்லமுடியும்?" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.
அட்ராக்ட் பண்ண வேண்டிய புலி, அட்டேன்ஷனில் கூட நிற்க வைக்காமல் சர்வ சாதாரணமாய் போகிறது!

No comments:

Post a Comment