Wednesday, October 7, 2015

இந்தியாவுக்கு 3-0 தோல்வி: டேவிட் மில்லர் திட்டவட்டம்


கட்டாக்கில் இந்திய அணி விக்கெட் ஒன்றை கொண்டாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள். | கோப்புப் படம்.


டி20 கிரிக்கெட் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கும் தென் ஆப்பிரிக்கா 3-வது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு 3-0 தோல்வியைப் பெற்றுத் தரும் என்று அந்த அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத விதத்தில் டி20-யில் ஆதிக்கம் செலுத்தும் தென் ஆப்பிரிக்கா அணியின் மனநிலை பற்றி டேவிட் மில்லர் உற்சாகம் தெரிவித்தார்.

"நாங்கள் 2-0 என்று முன்னிலையில் உள்ளோம், எனவே 3-0 என்று அதனை மாற்ற உறுதியாக இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் உண்மையிலேயே நல்ல முறையில் அமைந்தது. அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம், நாளை கொல்கத்தாவில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவோம்.

கொல்கத்தாவுக்கு 2-0 என்ற முன்னிலையுடன் வருவது அருமையாக உள்ளது. தொடரை வென்றது உண்மையில் பெரிய வெற்றியே. இங்கு வரும்போதே நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதியுடனும், எங்களுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டும் வந்தோம்.

மிகப்பெரிய வீரர்களுடன் கூடிய இந்திய அணி ஒரு மிகப்பெரிய டி20 அணியாகும். எனவே உலக டி20 இங்கு நடைபெறும் நிலையில் இந்தியாவை வீழ்த்தியது பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது. 

இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறோம். அதற்கு இந்தத் தொடரில் வெற்றி பெறுவதென்பது மிகப்பெரிய தன்னம்பிக்கை ஊட்டமாகும்” என்றார். 

பனிப்பொழிவு இருப்பதால் உள்நாட்டு டி20 போட்டிகளை இன்னும் முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று தோனி கூறியிருப்பது பற்றி டேவிட் மில்லரிடம் கேட்ட போது, “எனக்கு இது பற்றி என்ன கூற வேண்டுமென்று தெரியவில்லை. பனிப்பொழிவு ஓரளவுக்கு பிரச்சினையே. ஆனால் இது இரு அணிகளுக்கும்தானே. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை என்றே கருதுகிறேன்.

நாங்கள் இங்கு வந்து வெற்றி பெறுவதற்கு ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பலர் ஆடுவதும் காரணம். ஐபிஎல் ஒரு அருமையான தொடர், நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நிச்சயம் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய பிட்ச் நிலைமைகள் நன்றாக தெரிய ஐபிஎல் ஒரு மிகப்பெரிய உதவி புரிந்துள்ளது. நாங்கள் உள்நாட்டில் விளையாடுவது போல்தான் உணர்கிறோம்”

இவ்வாறு கூறினார் மில்லர்.

No comments:

Post a Comment